“நான் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்க வேண்டுமென்றால், என் தொகுதி மக்களின் கிட்னியை எல்லாம் கழற்றினால்தான் முடியும்” என்ற திமுக எம்.எல்.ஏ. கதிரவனின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ஏழை மக்கள் தங்கள் கிட்னியை விற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் உரிமம் அரசால் ரத்து செய்யப்பட்டது.
இந்த மருத்துவக் கல்லூரியின் உரிமையாளர் சீனிவாசனின் மகனும், மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான கதிரவன், சமீபத்தில் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி வழங்கியபோது, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
“எப்போது காசு குறைவாக இருக்கிறதோ அப்போது கிட்னி எடுக்கலாம் என்று ஜாலியாகத்தான் சொன்னேன். ஒரு அறுவை சிகிச்சைக்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் வசூலிப்போம். அதில் எனக்கு 2 முதல் 3 லட்சம் தான் கிடைக்கும். என் அப்பாவின் ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை 14 கோடி. 252 அறுவை சிகிச்சை செய்தும் அந்த அளவு பணம் வரவில்லை. அதனால் திருப்பத்தூர் ஊரிலுள்ள அனைவரின் கிட்னியையும் கழற்றினால்தான் வாங்க முடியும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்த அறுவை சிகிச்சைகளால் பலரின் உயிரை காப்பாற்றியிருக்கிறேன். நான் மருத்துவக் கல்லூரி நடத்துவது ஒரு சேவையாகும்; சம்பாதிக்கப் பல வழிகள் உள்ளன” என்றும் கதிரவன் கூறினார்.
இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.















