தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் பெற்றிருக்கும் விருதுகளை கண்டு, தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆச்சரியத்தில் வாய்பிளந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது, யோகி பாபு நடிக்கும் குர்ரம் பாப்பிரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில், அவர் பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை சந்தித்தார். அப்போது பிரம்மானந்தம், யோகி பாபுவை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
பின்னர், யோகி பாபு அவரது இல்லத்திற்கு சென்றபோது, பிரம்மானந்தம் அன்புடன் வரவேற்று விருந்தளித்தார். அங்கு, பிரம்மானந்தம் இதுவரை பெற்றிருக்கும் நூற்றுக்கணக்கான விருதுகள், அவரது வீட்டின் மூன்று அறைகளில் ஷெல்ஃபுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையிட்ட யோகி பாபு, “இத்தனை விருதுகளா?” என ஆச்சரியமடைந்தார்.
ஒவ்வொரு விருதும் எந்தப் படத்திற்காக, யாரால், எங்கு வழங்கப்பட்டது என்பதையும் பிரம்மானந்தம் விரிவாக விளக்கிக் கூறினார். மேலும், “யோகி பாபுவைப் பார்த்தால் நகைச்சுவை நடிகர் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால், அவர் தனது நடிப்பில் நகைச்சுவையை எளிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருபவர்” என்று அவர் பாராட்டினார்.