சென்னை :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயரில் செயல்படும் “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” போன்ற அரசுத் திட்டங்களை அதே பெயர்களிலேயே தொடர அனுமதிக்கக் கோரி, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவைப் பார்வையிட்ட சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கு முன்னதாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதல்வரின் பெயர் பயன்படுத்தப்படுவது அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசுத் திட்டங்களுக்கு வாழும் ஆளுமைகளின் பெயரை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், திட்ட விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறைச் செயலாளர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், முதல்வர் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் நிர்வாகத் தலைவர் என்பதால், அவரை அரசியல் ஆளுமை என வகைப்படுத்த முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் முன்னாள் தலைவர்களின் புகைப்படங்களை தடை செய்யாததாகவும் தமிழக அரசு தரப்பில் வாதமிடப்பட்டுள்ளது.