திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களின் நன்மைக்காக தரிசன முறையில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறது. பவித்ரோத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மிதமான அளவில் காணப்படுகிறது. தற்போது சர்வ தரிசனத்திற்காக 12 முதல் 15 மணி நேரம் வரையிலான காத்திருப்பு நேரம் இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியத்தை குறைக்க, “ஒரே நாளில் தரிசனம்” செய்யும் புதிய திட்டத்தை TTD அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், காலை நேரத்தில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் அன்று மாலையே ஏழுமலையான் தரிசனம் செய்ய முடியும்.
திடீரென திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக எஸ்எஸ்டி (SSD) டோக்கன் முறையும் புதிய மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் முழுமையாக இலவசம் மற்றும் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லாதவை. பக்தர்கள் நடந்தோ, பஸ்சிலோ அல்லது சொந்த வாகனத்தில் திருமலையைக் சென்றால், தரிசனம் செய்து திரும்ப முடியும்.
எஸ்எஸ்டி டோக்கன் விநியோகம் :
இடங்கள்: ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபெரி நடைபாதை)
விநியோக நேரம்: ஆகஸ்ட் 1 முதல் மாலை 4.30 மணிக்கு தொடக்கம்
கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் அதிகாலை 1 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படலாம்
ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசனம்:
ரூ.10,000 நன்கொடையை வழங்கும் பக்தர்கள், ரூ.500 செலவில் விஐபி தரிசன டிக்கெட்டை பெறலாம்
திருமலையில் உள்ள கவுண்டரில் 800 டிக்கெட்டுகள், திருப்பதி விமான நிலைய கவுண்டரில் 200 டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
புதிய சோதனை முறை (ஆ.1 முதல் ஆ.15 வரை):
இந்நிலையில், ஆஃப்லைனில் ஸ்ரீவாணி டிக்கெட் வாங்கும் பக்தர்கள் அன்று மாலையே (04:30 மணி) வைகுண்டம் ஒன்றின் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பே டிக்கெட் பெற்றவர்கள் வழக்கம்போல் காலை 10 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு தரிசனம் செய்யலாம்.
இந்த புதிய ஏற்பாட்டின் மூலம், பக்தர்கள் நாள்கள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சிரமம் இல்லாமல், ஒரே நாளில் ஏழுமலையான் தரிசனம் செய்து திரும்பும் வசதி பெறுகிறார்கள்.