சென்னை :
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்தால், கண்டிப்பாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து சந்திப்பு நேரம் கேட்கப்பட்டால், அது நிச்சயமாக நடைபெறும்” என்று கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை 31) காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரை மீண்டும் சந்தித்த ஓ.பி.எஸ்., கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மரியாதையின் அடிப்படையில் சந்தித்தேன். அரசியல் ரீதியான எந்தப் பேசவும் நடக்கவில்லை” என்றார்.
ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து பாஜகவுடன் இருக்கும் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அதே நாளில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.