சென்னை: நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி, தேசத்துக்கு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழகத்தில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். இதையொட்டி நகரம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலத்தின் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டன.
“தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத்தந்தவர் கலைஞர்”
தேசியக் கொடியை ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,
“சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வணங்குகிறேன். நம் விடுதலை, அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது. தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத்தந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்தியா அனைவருக்குமான நாடாக இருக்க வேண்டும் என்பது தலைவர்கள் கண்ட கனவு,” என்று குறிப்பிட்டார்.
மேலும், 1967-ல் திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. தியாகிகளை போற்றும் மனிமண்டபங்கள், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய அறிவிப்புகள்:
முதல்வர் ஸ்டாலின், சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான பல்வேறு நலத் திட்ட உயர்வுகளை அறிவித்தார்:
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹22,000 ஆக உயர்வு
தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹12,000 ஆக உயர்வு
கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹11,000 ஆக உயர்வு
2ஆம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ₹15,000 ஆக உயர்வு
2ஆம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ₹8,000 ஆக உயர்வு
முன்னாள் படை வீரர்களுக்காக சென்னை மாதவரத்தில் 33,000 சதுர அடி பரப்பில், ₹22 கோடி மதிப்பில் தங்கும் விடுதி அமைப்பு
மேலும், மாநில அளவில் ஓட்டுநர் பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.