ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி  75 ஆயிரம் லட்டுகள் தயார்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க 75,000 லட்டுகள் தயாரிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி அன்று இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடக் கோயில் வார வழிபாட்டுக் குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதன்படி, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 50-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு, தூய்மையான முறையில் 75,000 லட்டுகளைத் தயாரித்து வருகின்றனர்.

இது குறித்து கோயில் வார வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளதாவது: நாளை அதிகாலை 4.30 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும் வரை, தரிசனத்திற்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். லட்டுடன் சேர்த்து, பக்தர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் அருளாசியின் அடையாளமாக ஆரஞ்சு நிறக் கயிறு மற்றும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை அதிகாலை முதலே சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏதுவாகக் கோயில் வளாகத்தில் சிறப்பு வரிசைகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version