மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வரும் நிலையில் வீட்டின் உட்புற 7 அடி சுவர் இடிந்து விழுந்ததில் விளையாடி கொண்டிருந்த 5வயது சிறுமி மீது விழுந்து படுகாயம் அடைந்த சிறுமியை காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலைமறியல் போலீசார் பேச்சுவார்த்தை:-
மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி பொய்கைகுடி கிராமத்தில் காமராஜர் – சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். காமராஜர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாஷா(8), சஹானாஸ்ரீ (5) என இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர். ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி கிராம வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு மேல் தளம் மூடப்பட்டு பூச்சி வேலைகள் செய்யாமல் முழுமையடையாமல் இருக்கிறது.
இந்த நிலையில் 5 வயது இளையமகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சஹானாஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது வீட்டின் உட்புறம் நடுவில் உள்ள 7 அடி உயரம் சுவர் இடிந்து விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கி சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சுவருக்கு அடியில் சிக்கிய குழந்தையை மீட்டு காளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறித்தினர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் சிறுமி பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ்சில் சிறுமியின் உடல் ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து காளி ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் இந்த காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்ததாகவும் தற்போது ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை என்றும் , மருத்துவர்களும் இல்லை என்றும் குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 8 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலைமையிடமான காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்கள் பணி அமர்த்த வேண்டும், நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தர கோரியும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சிறுமியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருமங்கலம் மணல்மேடு சாலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
