கோலாலம்பூர் : மலேசியா முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், சுமார் 6,000 பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த வாரம் மட்டும் 97 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போதைய நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக மாறியுள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்புளுயன்சா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் மழலையர் மற்றும் தொடக்க நிலை மாணவர்கள் ஆவர்.
சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹமது தெரிவித்ததாவது :
“கோவிட்-19 கால அனுபவத்தின் மூலம், இத்தகைய தொற்றுகளை எதிர்கொள்வதற்கான திறன் எங்களிடம் உள்ளது. தற்போது 6,000 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சுத்தம் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் குழுவாக சேர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
மலேசியா முழுவதும் சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் இணைந்து காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.