சென்னை: தூய்மை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 6 புதிய சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.
சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த பல நாட்களாக பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள், நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தூய்மை பணியாளர்களுக்காக அரசு எடுத்து வைத்துள்ள 6 முக்கிய தீர்மானங்களை அறிவித்தார். அவை :
தோல் நோய் சிகிச்சை திட்டம் – குப்பை மேலாண்மை பணியின் போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அதற்கான தனிச்சிகிச்சை திட்டம் அமல்படுத்தப்படும்.
பணிமரணம் நிவாரணம் – பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
சுய தொழில் மானியம் – சுய தொழில் தொடங்கும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர் கல்வி உதவித்தொகை – தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் அமல்படுத்தப்படும்.
வீடு வழங்கல் – நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் ‘கருணாநிதி கனவு இல்லம்’ திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
காலை உணவு வழங்கல் – அதிகாலை பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு வழங்கப்படும்.
“இந்த 6 சிறப்பு திட்டங்கள் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அமையும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
