அடுத்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஏவக்கூடிய நிலையை இந்தியா அடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி துறையில் இஸ்ரோ எடுத்துள்ள சவாலான முயற்சிகள் இளைஞர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. தற்போது ஆண்டுக்கு சுமார் 5 ராக்கெட்டுகள் மட்டுமே ஏவப்படுகின்றன. இந்த ஏவுதல்களில் தனியார் துறையின் பங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை ஏவக் கூடிய திறனை நாம் பெற வேண்டும். அதாவது, ஒவ்வொரு வாரமும் ஒரு ராக்கெட்டை ஏவ வேண்டும்,” என்றார்.
மேலும் “விண்வெளித் தொழில்நுட்பம் இன்று இந்தியாவின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மீனவர்களுக்கும், பல துறைகளுக்கும் பயன்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனின் தென் துருவத்தை அடைந்து வரலாறு படைத்த நாடாக இந்தியா திகழ்ந்தது.
சில நாட்களுக்கு முன்பு குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தினார். விரைவில், இந்தியாவின் சொந்த விண்வெளி வீரர் குழுவை உருவாக்க உள்ளோம். இளைஞர்களும் இதில் சேர்ந்து நாட்டின் கனவுகளை நனவாக்க வேண்டும்.
வரும் காலங்களில், உங்கள் உழைப்பால் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தையும் அமைக்கும். கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் பல பெரிய சீர்திருத்தங்களை நாடு கண்டுள்ளது,” என பிரதமர் மோடி உரையில் கூறினார்.