தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்ஏற்பாட்டுப் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகளை (First Level Checking – FLC) மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கெனத் தனிப்பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 160. சீர்காழி (தனி), 161. மயிலாடுதுறை மற்றும் 162. பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தக் கிடங்கில்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units): 2,139 கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Units): 1,267 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் (VVPAT): 1,349 என மொத்தம் 4,755 இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த டிசம்பர் 11-ம் தேதி முதல் இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இயந்திரங்களின் செயல்பாடுகள், பேட்டரி தரம் மற்றும் பட்டன்களின் துல்லியம் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
நடைபெற்ற ஆய்வின் போது, இயந்திரங்கள் திறக்கப்பட்டு சரிபார்க்கப்படும் முறையை கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகள் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கிடங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு குறித்தும் கேட்டறிந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் மயிலாடுதுறையில் விறுவிறுப்பாகத் தொடங்கி இருப்பது, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதை உணர்த்துகிறது.

















