மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தை ஒருவர் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம், மக்கள் மனதில் பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளி வெளியாகி பார்வையாளர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
வசாய் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு அன்விகா பிரஜாபதி எனும் 4 வயது பெண் குழந்தை உள்ளார். கடந்த புதன்கிழமை (25.07.2025) மாலை 8 மணியளவில், நைகானில் உள்ள நவ்கர் நகர் குடியிருப்பில் இந்தக் கோர விபத்து நடந்தது.
அந்த நேரத்தில், அன்விகாவுடன் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்த தாயார், காலணிகளை அணிவதற்காக ஜன்னல் அருகே இருந்த காலணி பெட்டியின் மீது குழந்தையை அமர வைத்தார். அந்த ஜன்னல் திறந்த நிலையில் இருந்ததோடு, பாதுகாப்பு கம்பிகளும் அமைக்கப்படவில்லை.
சுட்டித் தனமாக விளையாடிக் கொண்டிருந்த அன்விகா, ஜன்னலில் ஏறி அமர்ந்த போது திடீரென தடுக்காமல் கீழே விழுந்தார். வெறும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து குழந்தையின் உயிரை பறித்தது.
மருத்துவமனையில் கொண்டு சென்றும் பலனில்லை:
தாயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக உதவிக்கு ஓடினர். சிறுமியை அருகிலுள்ள வசாய் மேற்கு பகுதியில் உள்ள சர் டிஎம் பெட்டிட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
விசாரணை ஆரம்பம் :
இந்த விபத்துக்காக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்தும், பெற்றோரின் தரப்பில் ஏற்புடைய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
சோகத்தில் குடும்பத்தினர் :
அன்விகாவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை துடிக்க வைத்துள்ளது. பகுதியில் இந்த சம்பவம் பெரும் மனவேதனையையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையையும் எழுப்பியுள்ளது.