மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டுதோறும் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உப்பனாற்று கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடத்தை மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மொத்தம் 395 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் 203 விநாயகர் சிலையும் சீர்காழி உட்கோட்டத்தில் 192 விநாயகர் சிலைகளும் வைக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்படும் சிலைகள் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. மீதம் உள்ள விநாயகர் சிலைகள் 29ஆம் தேதி முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை வைப்பதற்கு தேவையான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் சீர்காழி உப்பனாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் போதிய மின்விளக்கு வசதிகள், தூய்மை பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Exit mobile version