சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. வழக்கம் போல இன்று பலர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பலத்த சத்தத்துடன் வெடித்த இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால், அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வுகள் நடத்தி, அனுமதியின்றி நடைபெறும் பட்டாசு தயாரிப்புகளை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.