திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சவளக்காரன், சேரன்குளம், சித்தண்ணக்குடி, உள்ளிக்கோட்டை, தென்பாதி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மகப்பேறுக்கான சிகிச்சை பிரிவு அரசு மருத்துவமனை கட்டடத்தில் அமைந்துள்ளது. மகப்பேறு கட்டிடத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டால் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 40 யூபிஎஸ் பேட்டரிகள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தில் உள்ள 27 பேட்டரிகள் காணாமல் போய் உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக தலைமை மருத்துவரிடம் கூறியுள்ளனர். தலைமை மருத்துவர் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்மந்தமாக இதுவரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எடுத்துள்ளனரா, இல்லை மர்ம நபர்கள் திருடி உள்ளனரா என பலரிடம் தலைமை மருத்துவர் விசாரணை நடத்தி வருகிறார்.
குறிப்பாக குழந்தைகள் ஐசியு வைக்கப்பட்டு வரும் நிலையில் மின்தடை ஏற்பட்டால் இந்த பேட்டரி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 27 பேட்டரிகள் காணாமல் போய் உள்ளதால் குழந்தைகளுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் மேலும் அரசு மருத்துவமனையில் 4 லட்சம் மதிப்பிலான பேட்டரி திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக திருட்டு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.