மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சேமிப்புக்கிடங்குகளில் இருந்து 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில் வேன்கள் மூலம் அரவைக்காக திருப்பூர் மண்டலத்துக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் அறுவடை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. செப்.1-ஆம் தேதிமுதல் 2025-2025-ஆம் ஆண்டு காரிப் பருவத்திற்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட புதிய விலையில் கொள்முதல் நடைபெற்றுவரும் நிலையில், ஏறத்தாழ அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இயக்கம் செய்யப்படாமல் நெல்மூட்டைகள் தேக்கமடைந்தன. ஓவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5,000 முதல் 10,000 நெல் மூட்டைகள் வரை தேக்கமடைந்திருப்பதாகவும், இதனால் புதிதாக கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். டெல்டா மாவட்டம் முழுவதும் இந்த நிலை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் அனைத்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியருடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள், சிந்தாமல் சிதறாமல் உலைக்குப் போகும் வரை உன்னத தன்மையுடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் எடமணல், மாணிக்கபங்கு, சித்தர்காடு உள்ளிட்ட நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் சேமிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல்லினை அரவைக்கு அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 40 ரயில் வேகன்களில் 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, திருப்பூர் மண்டலத்துக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

Exit mobile version