பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் கைது

பெண் குழந்தையை விற்பனைக்காக வீட்டில் பதுக்கியிருந்த 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பழனிபுரம் 4-ஆம் வீதியைச் சேர்ந்த செல்வி வீட்டருகே நேற்று நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற பவானி போலீசார், செல்வியிடம் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த ஜானகி உடன் இணைந்து, குழந்தைகளை வாங்கி வந்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இருவரும் துணிப்பைத் தயாரிக்கும் டெய்லர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

பணப்பற்றாக்குறை காரணமாக, அரசு மருத்துவமனை மற்றும் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ய முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 9 மாத பெண் குழந்தையை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, செல்வி மற்றும் ஜானகி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தை ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் குழந்தையை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதாக செல்வி மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்தக் குழந்தை விற்பனை கும்பலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version