மும்பை : 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹர்பஜன் சிங் – ஸ்ரீசாந்த் சம்பவம் தொடர்பான வீடியோவை முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தற்போது வெளியிட்டுள்ளார். இதற்கு ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2008 ஐபிஎல் சர்ச்சை
முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியபோது, போட்டி முடிவில் கைகுலுக்கும் தருணத்தில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார். இதனால் ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. சம்பவத்திற்குப் பின்னர் ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.
பின்னர் மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்
அதிகாலத்தில் ஏற்பட்ட இந்த சர்ச்சை குறித்து ஹர்பஜன் சிங் பல முறை வருத்தம் தெரிவித்தார். “என் வாழ்க்கையில் நீக்க விரும்பும் ஒன்று என்றால் அது ஸ்ரீசாந்துடனான அந்த சம்பவம் தான். நடந்தது தவறு, அதைச் செய்ததற்கு பல முறை மன்னிப்பு கேட்டேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
வீடியோ வெளியிட்ட லலித் மோடி
17 ஆண்டுகளுக்குப் பிறகு, சம்பவத்தின் வீடியோவை அப்போதைய ஐபிஎல் தலைவர் லலித் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது மோடி, பணமோசடி வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையாக சாடிய ஸ்ரீசாந்த் மனைவி
இந்த வீடியோவை வெளியிட்டதற்கு ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா பதிவில்,
“@lalitkmodi மற்றும் @michaelclarkeofficial உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். உங்கள் மலிவான விளம்பரத்திற்காக 2008இல் நடந்ததை இழுத்துக் கொண்டு வந்துள்ளீர்கள். ஸ்ரீசாந்த், ஹர்பஜன் இருவரும் வாழ்க்கையில் முன்னேறிவிட்டனர். இன்று அவர்கள் தந்தைகளாக இருக்கிறார்கள். ஆனால், உங்கள் செயல் அவர்கள் குடும்பத்தையும், சிறிய குழந்தைகளையும் பாதிக்கிறது. இதற்காக இருவரும் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.
