‘நல்ல புத்தி’ வேண்டுதல்… ‘கூட்டுப் பிரார்த்தனை’ கிண்டல்.. அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன ?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

இந்த தீர்மானத்தை பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வாசித்தார். அன்புமணி மீது சாட்டப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:

கடந்தாண்டு புத்தாண்டு பொதுக்குழுவில் மைக்கை தூக்கி எறிந்து குழப்பம் ஏற்படுத்தியது.

தைலாபுரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 108 பேரில் 100 பேரை வரவிடாமல் தடுத்தது.

சமூக ஊடகப் பிரிவினரின் மூலம் ராமதாஸ் மீது தவறான தகவல்களை பரப்பியது.

சமாதான பேச்சுவார்த்தையை புறக்கணித்தது.

தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தியது.

ராமதாஸ் அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி, அவரது புகைப்படம் வைத்து ‘நல்ல புத்தி தரவேண்டும்’ என வேண்டிய அவமானம்.

தகவல் தெரிவிக்காமல் ‘உரிமை காக்கும் பயணம்’ மேற்கொண்டது.

ராமதாஸைச் சந்திக்க வந்தவர்களை தடுத்து, கடத்திச் சென்றது.

‘எங்களது குலசாமி’ என்று தொடர்ந்து பேசி, ராமதாஸின் பெயரை பயன்படுத்தியது.

பாமக தொலைக்காட்சியில் ராமதாஸ் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவில்லை.

ராமதாஸ் தொடங்கிய பசுமை தாயகம் அமைப்பைக் கைப்பற்றியது.

பாமக தலைமை அலுவலகத்தை மாற்றியது.

“ராமதாஸுடன் 40 முறை பேசியேன்” என்று பொதுவெளியில் பொய் கூறியது.

ராமதாஸ் அறிவித்த நியமனங்களை நிராகரித்தது.

பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ‘கூட்டுப் பிரார்த்தனை’ செய்வோம் என்று கேலி செய்தது.

பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸிற்கு நாற்காலி ஒன்று போட்டு அவமதித்தது.

இந்த குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையை ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாஸிடம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேட்டியளித்த ஜி.கே.மணி, “அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது நிறுவனர் ராமதாஸின் முடிவு” எனவும், “பொதுக்குழு கூட்டத்தால் பாமகவின் தொய்வு நீங்கியுள்ளதாக”வும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version