‘கொடூரத்தின் உச்சம்’ – நிவாரணத்திற்கு காத்திருந்த 1,373 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட கொடூரம் !

காசா :
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இதுவரை 60,000 பேர் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர் காரணமாக உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாமல் மக்கள் போராடி வருகிறார்கள். பசியில் துடிக்கும் குழந்தைகள், மூலையில் சுருண்டு கிடக்கும் மூதாட்டிகள், அழிந்த வீடுகள், நாசமான தெருக்கள்… இதுவே இன்று காசாவின் நிஜம்.

இந்த நேரத்தில், நிவாரணப் பொருட்களைப் பெற கூட்டமாக காத்திருந்த மக்களுக்கு மீதும் தாக்குதல் நடந்து, 1,373 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பசி மற்றும் பட்டினியை போர் ஆயுதமாகவே பயன்படுத்துகிறது என ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற நிலைமை 21ம் நூற்றாண்டில் கடந்து வந்த மிகப்பெரிய மனித பேரழிவாகவே பார்க்கப்படுகிறது.

“உலகம் இதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது… ஆனால் காசா மக்கள் நரக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்” என உலக உணவுத் திட்டத்தின் அவசர இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version