12-ம் வகுப்பு மாணவி குத்திக் கொலை – காதலை நிராகரித்ததால் இளைஞர் வெறிச்செயல்

ராமேஸ்வரம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை, காதலை ஏற்க மறுத்ததால் 21 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

போலீஸ் தகவலின்படி, சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர், மாணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டபோது, மீண்டும் அவரை பின் தொடர்ந்து வந்து காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததும், தப்பித்து செல்ல முயன்றதும், ஆத்திரமடைந்த முனியராஜ் தன் வசம் வைத்திருந்த கத்தியை எடுத்து பல முறை குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடுமையாக காயமடைந்த மாணவி உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் உட்பட ஆதாரங்களை சேகரித்தனர். இதில், சம்பவத்திற்கு முன் இளைஞர் மாணவியை பின் தொடர்ந்து சென்ற காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பின்னர் முனியராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மாணவி கொல்லப்பட்ட சம்பவம், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version