நாகர்கோவில் கூட்டுறவு இணை பதிவாளரை அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11பேர் ஆஜர்.வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடைபெற்றது. 114 கூட்டுறவு சங்கங்கள் தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று குமரி மாவட்டத்தின் 6 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போதைய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 28 -ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்துவதற்காகச் சென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கையிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தவில்லை என இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜாவை எம்.எல்.ஏ.க்கள் ஒருமையில் பேசியதுடன், அலுவலக உதவியாளர் ஒருவரும் தாக்கப்பட்டார். இதுகுறித்து இணைபதிவாளர் நடுக்காட்டுராஜா நேசமணி நகர் போலீஸில் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது புகார் கொடுத்த நிலையில் போலீசாரால் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் ஜேஎம் இரண்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உட்பட 11 பேர் இன்று ஆஜர் ஆயினர் பிரின்ஸ் எம்எல்ஏ ஆஜராகவில்லை இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
