தஞ்சை ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டில் திருச்சியிலிருந்து 10,000 மகளிர் பங்கேற்பு: திமுக செயற்குழு கூட்டத்தில் வைரமணி அதிரடி தீர்மானம்

வரும் 26.01.2026 திங்கட்கிழமை அன்று தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள “வெல்லும் தமிழ் பெண்கள்” டெல்டா மண்டல மகளிர் மாநாட்டை முன்னிட்டு, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் குறித்த செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் நேரடிப் பார்வையில், டெல்டா மண்டலத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமையவுள்ள இந்த மாநாட்டைப் பெரும் வெற்றி அடையச் செய்வதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் களப்பணியைத் தொடங்கியுள்ளனர்.

திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்திற்கு, மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமை வகித்தார். திருச்சி மாநகரச் செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்து மாநாட்டின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், திருச்சி மத்திய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் கிளைக் கழகங்களில் இருந்து 10,000-க்கும் அதிகமான மகளிரைத் திரட்டி, வாகனப் பேரணியாகத் தஞ்சாவூர் மாநாட்டிற்கு அழைத்துச் செல்வது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக வார்டு மற்றும் பகுதி வாரியாக நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் செயற்குழு கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்து செல்வம், அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம், பொருளாளர் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், மகளிர் அணியின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மற்றும் மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் மதனா ஆகியோர் திரளான பெண் தொண்டர்களுடன் பங்கேற்றனர். பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த இலக்கை எட்ட அயராது பாடுபடப் போவதாக உறுதிபூண்டனர். இந்த மாநாடு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்பதால், திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மிகுந்த எழுச்சியுடன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Exit mobile version