காவிரி ஆற்றின் கிளை பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், முறையாக தூர்வாராத காரணத்தால் 100 ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு பெரும் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறுபாதி , மேட்டிருப்பு, விளநகர், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு வருட பயிரான மரவள்ளி கிழங்கு நடவு செய்யப்பட்டு 5 மாத காலம் ஆகின்றது இந்நிலையில் காவிரியின் கிளை பாசன வாய்க்காலான சத்தியவாணன் வாய்க்காலில் திடீரென்று அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்க்கால் சரி வர தூர்வாராத காரணத்தால் வாய்க்கால் தண்ணீர் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதன் காரணமாக இளம் மரவள்ளி கிழங்குகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. செய்த முதலீடாவது தேயுமா என்ற நிலையில் ஐந்து மாதத்திலேயே பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்பனைக்கு செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


