சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப் பணித்துறை வெட்டியதால் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள். மாற்றுப்பாதை இல்லாததால் அவரச தேவைக்கு கூட பாலத்தை கடக்க முடியாமல் சுற்றுவட்டார கிராமமக்கள் அவதி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆதமங்கலம்-புங்கனூர் இடையே 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்து நடுவே முடவன் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. இந்நிலையில் 10 மாதங்கள் கடந்தும் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் இதுவரை முடவன் வாய்க்கால் பாலம் கட்டுமான பணிகள் முடிவடையாமல் பாதியிலேயே நிற்கிறது. பாலப் பணிகள் துவங்கிய போது வாய்க்காலை கடந்து செல்வதற்காக பாலத்தின் அருகிலேயே தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக சாலையை வெட்டி அகற்றி விட்டனர். இதனால் ஆதமங்கலம்,புங்கனூர், பெருமங்கலம்,காடாகுடி,கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி,மருத்துவம்,வேலை வாய்ப்பு என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் இப்பகுதியை கடந்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் தற்போது அவசர தேவைக்குகூட கிராமத்தை விட்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் வேறு வழியின்றி பெற்றோர் மற்றும் கிராமத்திர் உதவியுடன் ஆபத்தான முறையில் வாய்க்காலில் இறங்கி பாலத்தின் மீது ஏறி மறுபுறம் சென்று வாய்க்காலில் இறங்கி செல்கின்றனர். இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாத இப்பகுதியில் வரும் மக்கள் பாலத்தில் ஏற முடியாமலும் இறங்க முடியாமலும் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளவதும் தொடர்கதையாகி வருகிறது.எனவே முடவன் வாய்க்கால் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்கவும் அதுவரை தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
