மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளியின் பொன் விழாவில் பங்கேற்க வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், பள்ளி நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது, படுகர் இனப் பழங்குடியினப் பெண்கள், பாரம்பரிய நடனமாடி அவருக்கு வரவேற்பு அளித்தபோது, ராகுல் காந்தியும் அவர்களோடு சேர்ந்து நடனமாடினார்.

இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் இருந்து பொங்கலை எடுத்து அனைவருக்கும் பறிமாறினார். இதையடுத்து பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, கல்வியை தனியார்மயமாக்கக் கூடாது என்ற ராகுல் காந்தி, தனியார் கல்வி நிலையங்கள் இருந்தாலும், இலவச கல்வியை வழங்க அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், தற்போது மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதைப்போல, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதற்காக, உற்பத்தி மற்றும் தயாரிப்பில் கவனம் செலுத்தும் வகையில், இந்தியாவின் கல்வி முறையில் மாற்ற கொண்டுவர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

Exit mobile version