மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17ஆம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்ற விவகாரத்தில் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் மற்றும் காவல்துறை உயர்மட்ட மேலதிகாரிகள் நெருக்கடி அளிப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்தார்.
தனது அலுவல் வாகனத்தை மயிலாடுதுறை தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரன், எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே இறங்கிக் கொண்டு காரை அனுப்பி வையுங்கள் என டிஎஸ்பியான தன்னிடம் அவமரியாதியாக பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை டிஎஸ்பி சுந்தரேசன் சுமத்தி இருந்தார். இந்நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த 20 ஆம் தேதி பணியில் ஒழுங்கீணமாக நடந்து கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து டி. எஸ்.பி
சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் 200 பேருக்கு மேல் பங்கேற்ற மக்கள்திரள் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் வடக்கு மண்டலத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை இயக்குநகரத்திலிருந்து அளிக்கப்பட்ட உத்தரவில் மயிலாடுதுறை மாவட்ட சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன், நிர்வாக அடிப்படையில் உடனடியாக வடக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கேற்ப தேவையான எதிர் உத்தரவுகளை பிறப்பித்து, பணியில் சேரும் தேதி மற்றும் பணியமர்த்தப்படும் இடத்தை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
