மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு:-
மேட்டூர் அணை நிகழாண்டு ஜுன் 12-ஆம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அதிக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதால் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடலுக்கு சென்றடைந்தது. பல லட்சம் கனஅடி நீர் கடலில் கலக்கும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ஏரி, குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் செல்வது தடைப்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் இன்றி குளங்கள் வறண்டுகிடப்பதால் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், பொதுப்பணித்துறை சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் திருமலைக்குமார் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குளங்களுக்கு தண்ணீர்செல்லும் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை இன்று பார்வையிட்டார். மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல், நல்லத்துக்குடி பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டுகிடந்த குளங்களை பார்வையிட்டு அதற்கு தண்ணீர் வரும் கிளை வாய்க்கால்களை ஆய்வுசெய்து தூர்ந்துபோய் உள்ள இடங்களை தூர்வாருவதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.