போதைக்குக் கொடுப்போம் ஒருநாள் விடுமுறை… மதுவை வெல்ல மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் காட்டிய எளிய மந்திரம்!

தஞ்சாவூர் வைகறை மருத்துவமனையில் மனநலம் மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு கூட்டம் 17-வது ஆண்டாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. புகழ்பெற்ற மனநல மருத்துவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதுவின் பிடியிலிருந்து மீண்டு புதிய வாழ்வைத் தொடங்கியுள்ள பல முன்னாள் குடிநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, மதுப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு, நீண்ட நாட்களாக மதுவின் வாசனையே இன்றி ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து வரும் சாதனையாளர்களுக்கு மருத்துவர் கே. ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்காகவும், அதன் தீய விளைவுகளைச் சமூகத்திற்கு உரக்கச் சொல்லவும் ஒவ்வொரு மாதமும் இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மதுப்பழக்கத்தை மறக்க விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது ‘தள்ளிப்போடும்’ பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதுதான் என்று குறிப்பிட்ட மருத்துவர் ராதாகிருஷ்ணன், “இன்று ஒரு நாள் மட்டும் குடிக்க வேண்டாம்” என்ற உறுதியான மனநிலையைத் தினமும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். சூழ்நிலைகள் மது அருந்தத் தூண்டும்போது, அந்த எண்ணத்தை ஒருநாள் தள்ளிப்போடும் மனப்பக்குவம் இருந்தால், மிக எளிதாகக் குடியற்ற நல்வாழ்வை எட்டிவிடலாம் என்று அவர் நம்பிக்கை ஊட்டினார். வெறும் மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, நல்வாழ்வு ஆலோசனைகள் மற்றும் குடியிலிருந்து மீண்டவர்களின் அனுபவப் பகிர்வுகள் மூலமே ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் விளக்கினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வைகறை மருத்துவமனை மேலாளர் நாகராஜன் விவேகானந்தன் மற்றும் மனநல ஆலோசகர் டெய்சி பிரியா ஆகியோர் கலந்துகொண்டு மதுவினால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசினர். விழாவின் நிறைவாக மூத்த மனநல ஆலோசகர் இலக்கியா நன்றி கூற, குடியற்ற சமுதாயத்தை உருவாக்கும் உறுதியோடு கூட்டம் நிறைவு பெற்றது.

Exit mobile version