*விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பி.என்., தோப்பு பகுதியில் 144 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை யொட்டி, 108 கலச அபிஷேகம், மகா சண்டியாக பெருவிழா நடைபெற்றது. கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம் நடந்தது. இதனை தொடர்ந்து, சண்டி ஹோமம், 13 அத்தியாய ேஹாமங்களோடு நடைபெற்றது.
இதில், 13 சுவாமிகளான மகா காளி, மகாலட்சுமி, சங்கரிதேவி, ஜெயதுர்கா, மகா சரஸ்வதி, பத்மாவதி, ராஜமாதங்கி, பவானி, அர்த்தாம்பிகை, காமேஸ்வரி, புவனேஸ்வரி, சூலினிதுர்கா, திரிபுரசுந்தரி ஆகியோருக்கு, பட்டுப்புடவை, பழங்கள், பூமாலைகளை யாகத்தில் செலுத்தப்பட்டது. இதில், நோய்களை நீக்கும் ஜெயதுர்கா சுவாமிக்கான யாகத்தில், விழுப்புரம் சட்டசபை தொகுதி லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற வேண்டி வழிப்பட்டனர். இதில், பொதுமக்கள், பக்தர்கள் பலர் தங்களின் குடும்பங்களோடு திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் புருஷோத்தமன், அறங்காவலர்கள் ஸ்ரீதர், ரேணுகா குபேரன் ஆகியோர் செய்தனர்.
