குத்தாலம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு செல்லும் லாரிகளால் சேதமடைந்த சாலை , கனரக வாகனங்கள் சென்றதால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர் , பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சாலையில் நாற்றுகளை நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தில் குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கு கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கிடங்கிற்கு செல்லக்கூடிய சாலை போடப்படாததால் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கிடங்கு திறக்கப்பட்ட பின்பு கனரக வாகனங்கள் குறுகிய பாதையில் இவ்வழியாக அதிக அளவில் சென்றதால் முற்றிலும் சாலை சேதமடைந்து குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று சேதமடைந்த சாலையில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலை அமைத்து தராவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
