திருவள்ளூர் ரயில் நிலையம் ஓட்டி மகாத்மா காந்திநகர், கே.கே. ஆர் அவென்யூ என இரண்டு நகர்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை பொதுவழியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லக் கூடியவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தினந்தோறும் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரயில் பாதையை ரயில்வே துறையினர் அடைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர், இந்த பாதையை அடைத்தால் இந்த பகுதி மக்கள் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக கூடும் என்பதால். அப்பகுதி பொதுமக்கள் இன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் மனு அளித்திருந்தனர், இதனை அடுத்து அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிடமாறு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு அமைச்சர் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்துடன் பேசி தீர்வு காணுவதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

















