கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொண்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், திமுக தரும் போலி வாக்குறுதிகள் எடுபடாது என திட்டவட்டமாக கூறினார். கரூர் துயர சம்பவத்தில் ஆளும் திமுக அரசை உசுப்பேத்தும் வேலையை திருமாவளவன் செய்துவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பாகுபாடின்றி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சர் தான் எனவும், இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளும் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாகவும் விமர்சித்தார்.
திமுக நடத்தும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு மட்டும் கரூர் ரவுண்டானா பகுதியில் அனுமதி அளிப்பதாகவும், எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் குறுகலான வேலுச்சாமிபுரத்தில் அனுமதி அளிப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டினார்.