தமிழ்நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம் குறித்து ஆய்வு செய்துவரும் ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் தருமபுரம் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு:- இயற்கை சீற்றம், பேரிடர்களை தாண்டி பீனிக்ஸ் பறவையை போன்று மீண்டெழுந்து சாதித்து வருபவர்கள் ஜப்பானியர்கள் என தருமபுரம் ஆதீனம் பாராட்டு:-
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி சார்பில் தமிழர் கலை மற்றும் பண்பாடு என்ற தலைப்பில் ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் 5 அமர்வுகளாக நடைபெற்ற கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, கருத்தரங்கத்தில் பங்கேற்ற ஜப்பானியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அருளாசி கூறி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்து தத்துவத்தில் ஆதி பௌதீகம், ஆதி தெய்வீகம், ஆதி ஆத்மீகம் ஆகிய மூன்றால்தான் இடர்கள் வருமென்று வகுத்துள்ளனர். இந்த இடர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்பதை ஜப்பானியர்கள் உணர்ந்ததால்தான் சிவலாயங்கள் சென்று வழிபடுகின்றனர். உழைப்புக்கு உதாரணமாக திகழ்பவர்கள் ஜப்பானியர்கள். இயற்கை சீற்றம், பேரிடர்களால் எத்தனையோ சோதனைகளை தாண்டி அவர்கள் பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டெழுந்து சாதித்து வருகின்றனர். உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கும் நிலையில், ஜப்பான் மொழிக்கு தாய்மொழியாக அவர்கள் தமிழ்மொழியை கூறுவது பாராட்டுக்குரியது என்றார். இந்த கருத்தரங்கத்தில், ஜப்பான் சிவஆதீனம் ஸ்ரீலஸ்ரீ பாலகும்ப குருமுனி தலைமையில் ஜப்பானியர்கள் 80 பேர் கலந்து கொண்டனர்.