மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம் வட்டாரங்களில் நிகழாண்டு சுமார் 20,000 ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்த திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் வட்டாரத்தில் சுமார் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி அருகே அகனி, வள்ளுவக்குடி, கொண்டல், மருதங்குடி, ஏனாக்குடி, நிம்மேலி , ஆதமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் மோட்டார் பம்பு செட்டு பாசனம் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சீர்காழி பகுதியில் இரு தினமாக பெய்த திடீர் கனமழையால் இப்பகுதியில் மட்டும் சுமார் 200 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த வயில்களில் மழை நீர் தேங்கி குறுவை நெல் மழை நீரில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடியாத நிலையில் இவை தற்போது முளைக்க தொடங்கியுள்ளன.இதனால் கடன் வாங்கி ,ஏக்கருக்கு ரூபாய் 20000 வரை செலவு செய்து குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆகையால் வேளாண் அதிகாரிகள் கொண்டல், அகணி , நிம்மேலி , வள்ளுவக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடிகளை கணக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
