கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கவும், பவளப்பாறைகளின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் இயற்கை பவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கை பவளப்பாறைகள்:-
அடுத்த மாதம் கடலில் நிறுவப்படவுள்ளது:-
மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கவும், பவளப்பாறைகளின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் இயற்கை பவளப்பாறைகளுக்கு மாற்றாக செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் கடலில் மீன்வளம் அதிகரிக்கிறது. செயற்கை பவளப்பாறைகள் நீருக்கடியில் சுற்றுலாவுக்கு ஒரு ஈர்ப்பாகவும் அமைகிறது. கான்கிரீட் கட்டமைப்புகள், உலோக கட்டமைப்புகள் மூலம் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்படுகின்றன.
அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றிய, மாநில அரசு நிதியுதவியுடன் செயற்கை பவளப்பாறை தயாரிக்கப்பட்டு வருகிறது. வட்டம், உருளை, முக்கோணம் ஆகிய 3 வடிவங்களில் செயற்கை பவளப்பாறை தயாரித்து கடற்கரையில் இருந்து சுமார் 10 மைல்கள் தூரத்திற்கு சென்று அங்கே கடலில் ஆழத்தில் நிறுவப்பட உள்ளது. தற்போது, தரங்கம்பாடியில் 7000-க்கு மேற்பட்ட செயற்கை பவளப்பாறை வடிவங்கள் செய்து தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் தரங்கம்பாடி, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை செய்யப்பட்டு வருகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் பவளப்பாறைகள் கடலூர், தரங்கம்பாடி, வேதாரணியம், கோடியக்கரை, அதிராம்பட்டினம், தேவிபட்டினம் உள்ளிட்ட 29 கடலோர பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி பகுதியில் அடுத்த மாதம் இந்த செயற்கை பவளப்பாறைகள் நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

