இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்தற்கு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள், அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை அவரது ஓட்டேரி இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கடந்த 11 – ஆம் தேதி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 1,500 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மேலும், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்குதல், யூனியனுக்கு சென்னையில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்குதல் ஆகியவற்றையும் உடனடியாக நிறைவேற்றுவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில், மாநாட்டில் வெளியிட்ட வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, யூனியனின் சென்னை கோட்ட தலைவர் தனசேகர், செயலாளர் தாம்பரம் இரமேஷ், பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர்கள் ஈஸ்வரன் குருக்கள், வியாசர்பாடி மனோகரன், சூளை கலைவேந்தன், பெரம்பூர் கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அமைச்சர் சேகர் பாபுவை அவரது ஓட்டேரி இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
அப்போது, அமைச்சருக்கு சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கியும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். அமைச்சர் கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக நடைபெற்ற மாநாட்டில், கோயில் வருமானத்தில் இருந்து சம்பளம் வழங்குதல், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பதவி உயர்வின்போது துறைத் தேர்விலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.