இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப் போராட்டத்தை மேலும் தீவிர படுத்தும் வகையில் சென்னையை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியான 311 ஐ நிறைவேற்ற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்காலத்தில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மக்களுக்காக 33 லட்சம் கொரோனா நிவாரண நிதியை வழங்கிய இடைநிலை ஆசிரியர்களுக்கு, சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று கலைஞர் வழிவந்த முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். புத்தாண்டு முடிந்து பள்ளி தொடங்கிய நிலையில், கோரிக்கை நிறைவேற்ற கோரி ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கும் அவரது பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டனர்.

Exit mobile version