கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் அவலம்.
அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி செவிலியர் மாணவிகளை கொண்டு ஊசி போடும் பரிதாபம்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி ஏராளமான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவம் பார்க்க வருவது வழக்கம். தற்போது இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமலும் உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வராமலும் இருப்பதால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடி கிடப்பதோடு அவசர தேவைக்கு மருத்துவம் பார்க்க வருபவர்கள் மருத்துவர்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலமும் ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த மருத்துவமனையில் அரசு செவிலியர்களுக்கு பதிலாக தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் பயிற்சி மாணவிகளை கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஊசி போடும் பரிதாப நிலையும் ஏற்பட்டு உள்ள நிலையில் பள்ளி சிறுவர்களுக்கு தனியார் கல்லூரி செவிலியர் மாணவிகளை கொண்டு ஊசி போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

