தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்கத்தினர் நடத்திய மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கௌரவத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், மாவட்ட நிதி காப்பாளர் ராமானுஜம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக அறிவித்திட வேண்டும், ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய பல கோடி ரூபாய் செலவில் ப்ளூடூத் இணைத்தல் ஏற்படுத்தியதால் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், விற்பனையாளர்கள் ப்ளூடூத் இணைப்பு, பிஓஎஸ் சர்வர் ஆகியவையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் விற்பனையாளர் கைபேசி மூலம் இணையம் இணைத்துதான் விற்பனை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எடையாளர் ஒருவர் அவசியம் தேவைப்படுகிறது. மேலும் புதிதாக இல்லம் தேடி பொருள்கள் விநியோகம் என்னும் புதிய திட்டம் மூலமாக வாகன செலவு, லோடுமேன் தேவை, எடையாளர் அவசியம், மழை பெய்யும் நேரத்தில் சேதம் ஏற்படுவது உள்ளிட்டவைகளை நியாயவிலை கடை ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அரசு இவற்றை பரிசீலித்து ரேஷன் பொருட்களை பையில் அடைத்து கொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version