ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம், உலகளவில் ரூ.510 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அண்மை கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலில் நடனமாடியுள்ளார். அனிருத் இசையமைத்த பாடல்கள் வெளியானதும் ஹிட் ஆனது.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கூலி’, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் ’ஏ’ சான்றிதழ் பெற்றதோடு, விமர்சன ரீதியாக பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து, இந்திய அளவில் ரூ.280 கோடி மற்றும் உலகளவில் ரூ.510 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:
“பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி நாம் குறை சொல்ல முடியாது. கூலி ஒரு டைம் டிராவல் கதை என்றும், LCU-வின் பாகம் என்றும் நான் ஒருபோதும் சொல்லவில்லை. டிரெய்லரை கூட 18 மாதங்கள் ரகசியமாக வைத்திருந்தேன்.
என்னால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக கதை எழுத முடியாது. நான் ஒரு கதையை எழுதுவேன்; அது அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் சரி, இல்லை என்றால் மீண்டும் முயற்சிப்பேன்,” என தெரிவித்துள்ளார்.
