தமிழ்நாடு அரசின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி அளித்துள்ளார்.
அந்த நிகழ்வில் பேசும்போது, தமிழரசன் பச்சமுத்து, “சச்சின், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் அதிகம் படிக்காமல் வெற்றி பெற்றவர்களாக எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறார்கள். ஆனால், அவர்களைப் போல் சாதிப்போர் மிகக் குறைவு. கல்வி கற்றதால் முன்னேறுகிறவர்கள் தான் அதிகம். எனவே, விதிவிலக்குகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளக் கூடாது” எனக் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒரு படம் எடுத்தாலே கல்வி அறிஞராக ஆகிவிட முடியாது. நான் சொல்வதையே அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. யாராவது சொன்னதைக் கேட்டு கைதட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மேடையில் கருத்து சொல்லக் கூடாது” என விமர்சித்தார்.
மேலும், அவர், “முதல்வர், துணை முதல்வர், பிரதமர் மோடி ஆகியோரின் கல்வித் தகுதி என்ன? படித்தவர்கள் வக்கீல்களாக உள்ளனர், ஆனால் படிக்காமல் துணை முதல்வராக ஆகிவிட்டதாக உதயநிதி தான் சொல்கிறார். எனவே கல்வியை மட்டும் வெற்றியின் ஒரே அளவுகோலாக காட்ட முடியாது” என தெரிவித்தார்.
தமிழரசன் பச்சமுத்துவின் கருத்துகளும், சீமான் வெளியிட்ட விமர்சனமும் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.