அன்று மகன்… இன்று மகள் : சட்டச் சிக்கலில் ஷாரூக் கான் குடும்பம் !

மும்பை:
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான், அலிபாக்கில் நிலம் வாங்கிய விவகாரம் தொடர்பாக சட்டச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்.

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டம் அலிபாக்கில் கடந்த 2023-24ஆம் ஆண்டில், சுமார் ரூ.22 கோடி மதிப்பில் இரண்டு நிலங்களை சுஹானா கான் வாங்கியுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ‘தேஜாவு ஃபார்ம் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மனைகளில் ஒன்று தால் கிராமத்தில் உள்ளது.

அந்த நிலத்தை ரூ.12.91 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படும் சுஹானா, ரூ.77.46 லட்சம் முத்திரை வரியும் செலுத்தியுள்ளார். குறிப்பாக, ஆவணங்களில் சுஹானா ஒரு விவசாயியாக பதிவு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதலில் விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலத்தை, பின்னர் பண்ணை இல்லமாக மாற்றியதால், வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பங்களாவை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து குடியிருப்பு துணை ஆட்சியர் சந்தேஷ் ஷிர்கே, அலிபாக் தாசில்தாரிடம் விசாரணை அறிக்கையை கோரியுள்ளார். முறைகேடுகள் உறுதியாகினால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுஹானா கான் அல்லது ஷாரூக் கான் இதுவரை எந்தவித கருத்தும் வெளியிடவில்லை.

போதைப்பொருள் வழக்கில் மகன் கைது

இதேநேரத்தில், ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான், 2021ஆம் ஆண்டு சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக என்.சி.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்படாததால், அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

சுஹானா கான் யார்?

ஷாரூக் கானின் மகள் சுஹானா கான், ஜோயா அக்தர் இயக்கிய தி ஆர்ச்சீஸ் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், தற்போது தந்தை ஷாரூக் கானுடன் கிங் படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ஷாரூக் கானின் தோள்பட்டை காயம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், அவர் உடல்நலம் சரியானவுடன் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version