சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழா கொண்டாடப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், தியாகராயர் நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் மூவர்ணக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் சிறிது பரபரப்பு நிலவியது. பின்னர் உடனடியாக கொடி இறக்கப்பட்டு, முறையாக மீண்டும் ஏற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன், “நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். பெற்ற சுதந்திரம் பறிபோய் விடுமோ என்ற கவலை உள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பையும் அடாவடித்தனத்தையும் தட்டிக் கேட்க ஒன்றிய அரசு தயாரில்லை. அமெரிக்காவின் காலில் விழுந்து சரணடைவதே பாஜக அரசின் நோக்கம்.
தேர்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக மாறியுள்ளது. மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். மாநில அரசு தூய்மை பணியாளர்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். திட்டங்கள் கொண்டு வந்தது நல்லது, ஆனால் முன்னதாகவே அவர்களுடன் சமரச பேச்சு நடத்த வேண்டியது அவசியம். தூய்மை பணியாளர்களை இரவில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தனியார்மயம் அனைத்து துறைகளிலும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று தெரிவித்தார்.