டிசம்பர் 12-ல் மகளிர் உரிமைத்தொகை  அமைச்சர் சக்கரபாணி அதிரடி பேட்டி

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் இன்று (டிசம்பர் 6) நிலவும் முக்கிய அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினார்.தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படவுள்ள ரூ.1,000 உரிமைத்தொகைத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.

29 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார் எனக் கூறினார்.மிக முக்கியமாக, தகுதியிருந்தும் உரிமைத்தொகை கிடைக்காத நபர்கள், அதுகுறித்து அப்பகுதி கோட்டாட்சியரிடம் (வருவாய் கோட்ட அலுவலர்/ RDO) மேல்முறையீடு செய்து மீண்டும் திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், விடுபட்ட தகுதியான நபர்களுக்கும் இத்திட்டம் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து எழுந்த கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி காட்டமாக பதிலளித்தார். குறுவை நெல் கொள்முதல் பணி அக்டோபர் 1 முதல் நடைபெறுவதாகவும், டெல்டா மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் பேரில், நெல்லின் ஈரப்பதம் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து தமிழகத்துக்கு வந்த 3 மத்திய குழுக்கள் பார்வையிட்டபோது நெல்லின் ஈரப்பதம் 20% முதல் 25% வரை இருந்தபோதிலும், மத்திய அரசு ஈரப்பதத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

17% ஆக இருந்த நெல் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடமும் நேரடியாகக் கடிதம் வழங்கியதாகத் தெரிவித்தார். அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருத்தை வலுப்படுத்திய அவர், “2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதனால், நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என மத்திய பாஜக – அதிமுக கூட்டணி நினைக்கின்றது. அதற்கு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ளனர்,” என்று தெரிவித்தார். மேலும், ஈரப்பதம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரங்களில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசின் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்களாவது நெல் கொள்முதலுக்கு அனுமதி வாங்கித் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் குறித்த மத்திய அரசின் புதிய நடைமுறைகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் பேசினார். முன்னதாக 100 கிலோவுக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்தது.

34,000 டன் கொள்முதலுக்கு 5 ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஆய்வுக்கு எடுக்கும் மாதிரிகளின் (Samples) எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மத்திய அரசு கெடுபிடிகள் காட்டுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, நெல் ஆய்வு மையங்கள் வட இந்தியாவில் மட்டுமே உள்ளதைக் குறிப்பிட்டு, தென்னிந்தியாவில் ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2014ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை அதிமுக சுட்டிக்காட்டாமல் இருப்பதை அமைச்சர் விமர்சித்தார். “அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புக்கு அவர்களாவது உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைப்பற்றிப் பேச மறுக்கிறார்கள்,” என்று கூறினார். தமிழகம் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை காக்கின்ற மாநிலம் என்றும், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளனர் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்தார். தேர்தல் ஆணையம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாகவும், வாக்காளர் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இறந்த வாக்காளர்கள், இருமுறை பதிவான நபர்கள், இடம் பெயர்ந்து சென்றவர்கள் ஆகியோரை நீக்கும் பணிகள் நடைபெறுவதாகவும், டிசம்பர் 14ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பின்பு, படிவம் 6 (Form 6) மூலம் விடுபட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version