தஞ்சை மண்ணில் சாதனைப் பெண்கள்: பான் செக்கர்ஸ் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 1,192 மாணவிகள் பட்டம் பெற்றனர்!

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. பான் செக்கர்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் தலைமை அன்னை மரிய பிலோமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரியின் செயலர் அருட்சகோதரி மரியம்மாள் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி விக்டோரியா 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான சாதனைகள் நிறைந்த ஆண்டறிக்கையை வாசித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) கணினி மற்றும் அமைப்பு சார் அறிவியல் பள்ளியின் புலத்தலைவரும், பேராசிரியருமான மஞ்சுகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்தக் கல்வி நிறுவனம் உங்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்றுத்தரவில்லை; உங்கள் மனதில் உயரிய கனவுகளை விதைகளாகத் தூவியிருக்கிறது. நீங்கள் இன்று பெறும் இந்தப் பட்டங்கள் வெறும் மதிப்பெண் சான்றிதழ்கள் அல்ல, அவை சமூகத்தின் அறியாமை எனும் இருளை அகற்றும் அறிவுச் சுடர்கள்” என்று மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் விக்டோரியா பட்டமளிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவிகள் அனைவரும் அதனை உறுதிப்பட ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, அனைத்து மாணவிகளும் தங்களது பட்டமளிப்புச் சான்றிதழ்களைச் சிறப்பு விருந்தினரின் முன்னிலையில், தங்கள் பெற்றோரின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்ற 4 மாணவிகளுக்கும், தரவரிசையில் இடம் பிடித்த 205 மாணவிகளுக்கும் சிறப்புப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 960 இளங்கலை மாணவிகள் மற்றும் 232 முதுகலை மாணவிகள் என 1,192 பேர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்தனர். கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கப் பேரவைத் தலைவி சையத் ஆசியா பானு, தான் இக்கல்லூரியில் பயின்ற போது பெற்ற அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் எனப் பெரும் திரளானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Exit mobile version