: கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டிகளில் சிவகங்கையைச் சேர்ந்த யோகா ஆசிரியை தனலட்சுமி, குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று முத்திரை பதித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெற்றன. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை மீனாட்சி நகரைச் சேர்ந்த யோகா ஆசிரியை எஸ்.தனலட்சுமி தமிழக அணியின் சார்பில் பங்கேற்றார்.
28 முதல் 60 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘யோகா நடனம்’ (Yogasana Dance) போட்டியில், ஆசிரியை தனலட்சுமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட தமிழகக் குழுவினர் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தினர். இசைக்கேற்ப கடினமான ஆசனங்களை ஒருங்கிணைந்து செய்த இவர்களின் குழு, தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 36 முதல் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘பாரம்பரிய யோகா’ (Traditional Yoga) தனிநபர் பிரிவில் போட்டியிட்ட தனலட்சுமி, வெண்கலப் பதக்கத்தை வென்று இரட்டைச் சாதனையைப் படைத்தார்.
தனது வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய ஆசிரியை தனலட்சுமி, “தேசிய அளவில் வெற்றி பெற்றது மிகுந்த பெருமை அளிக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் விரைவில் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளோம். சர்வதேச மேடையிலும் சிறப்பாகச் செயல்பட்டு ‘உலகச் சாம்பியன்’ பட்டத்தைப் பெற்று நாட்டிற்கும், சிவகங்கை மண்ணிற்கும் பெருமை சேர்ப்பதே எனது அடுத்த இலக்கு,” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் கலை மற்றும் விளையாட்டுத் திறமை தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது சிவகங்கை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்ற ஆசிரியைக்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
















