கோவையில் மாணவி ஒருவர் மீது இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்முறைக் சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அதில் சிலர் பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம் சாட்டும் வகையில் கருத்துரைத்திருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மாணவி ஒருவர் தனது காதலனுடன் காரில் கோவை ஏர்போர்ட்டின் பின்புறம் உள்ள பிரிந்தாவன் நகர் காட்டுப் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 3 பேர் திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் காதலனை அரிவாளால் வெட்டியதுடன், மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, குற்றவாளிகளை துப்பாக்கிச் சூட்டில் பிடித்தனர். மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை, நேரம் மற்றும் இடத்தை கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு எதிராக கோவை காவல் ஆணையர் ஆ. சரவணசுந்தர் விளக்கம் அளித்து,
“ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் தீர்ப்பு வழங்கக்கூடாது. பெண் செய்தது சரியா தவறா என்பதில் மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் தனிநபர் சுதந்திரம் உள்ளது” என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் பேரரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்:
“பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்வது பொய். ஒரு பெண் தனியாக சென்றால் கெடுப்பதென்ன? கோவை மாணவி சம்பவத்தைப் பார்த்தால் மனம் பதறுகிறது. அந்தப் பெண் இரவு 11 மணிக்கு அங்கே போனாள் என கேட்கிறார்கள். உங்க வீட்டுப் பெண்ணுக்கு இப்படியானது நடந்திருந்தால் இப்படி பேசுவீங்களா? அண்ணா பல்கலைக்கழகத்திலும் ‘அந்த பெண் புதருக்குள் போனாள்’ என்கிறார்கள். அப்படி போனால் கெடுப்பீங்களா?” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இச்சம்பவம், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பும், அவர்களது சுதந்திரத்தையும் மீண்டும் சிந்திக்க வைக்கும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
