மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர அரசு எந்தத் திட்டமும் பரிசீலனை செய்யவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 1, 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைக்கு பதிலாக தேசிய ஓய்வூதிய முறை (NPS) அமல்படுத்தப்பட்டது. இதனை ரத்து செய்து, ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பல தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நேற்று திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்க எந்தத் திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
புதிய வருமான வரி மசோதா தொடர்பாக, 1961 வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக கடந்த பிப்ரவரியில் அரசு முன்மொழிந்தது. விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மசோதாவை திரும்பப்பெற்று திருத்தங்கள் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தேர்வுக்குழு அளித்த 285 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வருமான வரி விதிகளை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா உருவாக்கப்பட்டதாகவும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழைய சட்டத்தை மாற்றும் வகையில் இது அமையப்போவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.